விவசாய வர்த்தக சந்தை

(சேனையூர் நிருபர் ) கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புப் பிரிவினால் 2023ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் நடமாடும் விவசாய விரிவாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி அனுசரனையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ விவசாய வர்த்தகச் சந்தை” 14.12.2023 வியாழக்கிழமை திருகோணமலை பிரதம செயலாளர் செயலக முன்றலில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R M P S இரத்தினாயக்க அவர்களும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் I. K. G. முத்துபண்டா அவர்களும்; பேரவைச் செயலக செயலாளர் திரு. M. கோபாலரட்ணம் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் பல திணைக்களத் தலைவர்களும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர். மாகாண விவசாயப் பணிப்பாளர் M.S.A. கலீஸ் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த மேற்படி நிகழ்வானது பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் அமைந்துள்ள உத்தியோகத்தர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பயன்தரும் மரக்கறிக் கன்றுகள், பழ மரக்கன்றுகள், மட்பாண்டங்கள் மற்றும் கைத்தறி துணிகள் போன்ற பல்வேறு பொருட்களும் இவ்வர்த்தகச் சந்தையில் விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டிருந்தன. தற்காலத்தில் வீட்டுத்தோட்டச் செய்கையானது ஊக்குவிக்க வேண்டிய ஒன்று என்பதை கருத்தில்கொண்டு உத்தியோகத்தர்களிடையே சுய பயிர்செய்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இவ்வர்த்தக சந்தை நடாத்தப்பட்டிருந்தது. விவசாயத் திணைக்களத்தின் பதில் உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. S. சிவஷங்கர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் விவசாயம் சார்ந்த தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் மற்றும் தகவல் திரட்டுகள் என்பனவும் பங்கபற்றியோருக்கு விநியோகிக்கப்பட்டிருந்தது. விவசாயத் திணைக்களத்தினால் ஊக்கப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்நிகழ்வுகளை வருங்காலங்களிலும் தொடர முயற்சிப்பதாக விவசாயப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post