(அ . அச்சுதன்)
"பெண்களின் அரசியலுக்கான தடைகளை கலைந்தெரிவோம்" எனும் தலைப்பின் கீழ் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் ,பெண் அரசியல் ஆர்வலர்களுக்கும் தெளிவூட்டும் செயலமர்வும் ,ஊடக கலந்துரையாடலும் திருகோணமலை மல்லிகா தனியார் விடுதியில் இன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.
தேசிய ஒற்றுமைக்கான அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்த இவ் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் ,பெண் அரசியல் ஆர்வலர்கள் என 20 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது திருகோணமலை மாவட்ட பெண் அரசியல் ஆர்வலர்களினால் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது.இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது
பெண்களின் அரசியல் பிரவேசங்களை ஆண் அரசியல்வாதிகள் பெரிதாக கண்டு கொள்வதில்லை.தேர்தல் காலங்களில் பெண்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.அந்த நேரத்தில் மாத்திரம் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.தேர்தல் முடிந்த பின்னர் பெண்களுக்கான எந்தவித நன்மைகளும், வரப்பிரசாதங்களும் பெரிதாக கிடைப்பதில்லையென கவலை தெரிவித்தனர்.அத்தோடு பெண்களுக்கும் அரசியலில் முன்னுரிமை கொடுக்கும் போதுதான் அவர்களால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்றனர்.