தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வலியுருத்தி வவுனியா நெடுங்கேணியில் கவனயீர்ப்பு

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றினைய வழியுருத்தி வவுனியா நெடுங்கேணியில் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று 05ம் காலை ஆரம்பமானது. இந்நிகழ்வில் பின்வரும் விடயங்களை வழியுருத்தி ஒன்றிணைவோம் என எற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.விடயம் பின்வருமாறு வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை சனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம். - அதனை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம். எனினும், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும், அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இப்பேச்சு வார்த்தைகள் அமைய வேண்டுமாயின் இப்பேச்சு வார்த்தைகள் வெளிப்படை தன்மை உடையதாக நடைபெற வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம். ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப் படவில்லை என்பதனை நாம் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். மேலும், நடைபெறவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான இப் பேச்சு வார்த்தைகளில் தனியொரு கட்சியைச் சார்ந்த ஒரு சில பிரதிநிதிகள் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் ஊடான தகவல்கள் வெளிவருகின்றமையை நாம் பார்க்கின்றோம். மேலும், அக்குறிப்பிட்ட அரசியில் கட்சியின் தலைமைத்துவங்களிடேயும் பரஸ்பரம் வெளிப்படைத்தன்மையுடைய கலந்துரையாடல்களோ, ஒருமித்த முன்னெடுப்புக்களோ காணப்படாததை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். -இது இத்தரப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்த மக்கள் மத்தியில் காணப்படும் விமர்சனமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்விற்கு பங்கம் விளைவிக்கும் ஜனநாயகமற்ற போக்காக காணப்படுவதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும். இதுவே தமிழ் மக்கள் தமது ஜனநாயக வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கடமையாகும். அந்த வகையில் கீழ் குறிப்பிடப்படும் முக்கிய விடயங்களிலும், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றோம். 01. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும். 02. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். 03. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். 04. வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். 05. ;தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும். 06. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத, கலாச்சார இடங்கள் தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தப்படல் வேண்டும். 07. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும். என வலியுருத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post