எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 67 வேட்பாளர்கள், மோசமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர், றோகண ஹெற்றியாராச்சி, குற்றப் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இவர்களில் 11 பேர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள். 3 வேட்பாளர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள். 5 வேட்பாளர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள். 3 வேட்பாளர்கள் ஊழல் குற்றம்சாட்டப்பட்டவர்கள். 8 வேட்பாளர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். 10 வேட்பாளர்கள் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள். 3 வேட்பாளர்கள் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள். 10 வேட்பாளர்கள் திருட்டுக் குற்றம்சாட்டப்பட்டவர்கள். 11 வேட்பாளர்கள் நிதிக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள். ஒருவர், மண்அகழ்வு குற்றங்களில் ஈடுபட்டதாகவும், ஒருவர் கடனை மீளச் செலுத்தாதவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களாவர்.
கம்பகா மாவட்டத்திலேயே, அதிகபட்சமாக 13 குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 10 குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கேகாலையில்-7, காலி, இரத்தினபுரியில் தலா-6, குருணாகலவில்- 3 என, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.