கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில், குளியலறையில் வழுக்கி விழுந்து, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனை, திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, டபிள்யூ.ஏ.எஸ்.ஆர்.விக்ரமராய்ச்சி, இன்று (21) மாலை தெரிவித்தார்.
கிண்ணியா சூரங்கல் -சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த நளீம் ஜனூபா (15வயது) என்ற கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அவரது கணவன்(18வயது) கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதற்கு தனது காதலனே காரணம் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார். எனினும், காதலன் அதனை மறுத்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, அவரால் தான் பெண் கர்ப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனையடுத்து, காதலன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எனினும், அந்தப் பெண்ணை தான் திருமணத் செய்துகொள்வதாகக்கூறி கடந்த 10ஆம் மாதம் 20ஆம் திகதி சூரங்கல் பள்ளி வாசலில் திருமணம் செய்து கொண்டார். எனினும், திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து அந்தப் பெண், தனது தாயின் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், கணவனின் வீட்டில் குளியலறையில் விழுந்து மரணமடைந்தாக ஆணின் உறவினர்கள் தெரிவித்தமை பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்த நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, கணவனை கைதுசெய்து தடுத்து வைத்துள்ள பொலிஸார், நாளைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர். வைத்திய பரிசோதனையின் பின்னர், பெண்ணின் ஜனாசா, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், கிண்ணியா சூரங்கல் மையவாடியில் இரவு 8 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கற்பிணிப் பெண் கணவனால் கழுத்து நெறித்து கொலை-கிண்ணியாவில் சம்பவம்
byRajkumar
-
0